| ADDED : ஜூன் 20, 2024 01:07 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட நமச்சிவாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி. 60 ஆண்டுகள் பழமையாகி மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள பள்ளியில், 30 மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, இதே பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரிந்து வரும் ஜெகதீஷ்குமார், 47, என்பவர், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 சென்ட் நிலத்தை, அரசு பள்ளி கட்டுவதற்கு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அலுவலகத்திற்கு தானமாக வழங்கினார்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி ஒன்றிய அலுவலகம் மூலம் கடந்த 2022ல் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 11.20 லட்சம் ரூபாய் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் என 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணி துவங்கியது. ஆறு மாதங்களுக்கு முன் பணி நிறைவடைந்தது. இருப்பினும் பள்ளி பயன்பாடட்டிற்கு வராமல் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் புதிய பள்ளி கட்டட திறப்பு விழா நடந்தது.இதேபோல் கொப்பூர் ஊராட்சியில் ஹூண்டாய் டிரான்சிஸ் லீயர் ஆட்டோமோட்டிவ் லிமிடெட் தொழிற்சாலை பங்களிப்புடன் 12 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் சீரமைக்கப்பட்டு, நேற்று திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.