| ADDED : ஜூலை 24, 2024 01:48 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள வல்லுார் அணைக்கட்டு கட்டப்பட்டு, 150ஆண்டுகள் ஆகிறது.மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மீஞ்சூரை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பயனற்று உள்ளது.இந்நிலையில், வல்லுார் அணைக்கட்டு பகுதி உரிய பராமரிப்பு இன்றி கிடப்பது கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.அணைக்கட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு ஓட்டைகள் ஏற்பட்டு, அதன் வழியாக தேங்கும் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. மழைக்காலங்களில் அணைக்கட்டின் நீர்வரத்து, வெளியேற்றம், இருப்பு உள்ளிட்டவைகளை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்ட, அளவீடு கருவி சேதம் அடைந்து அந்தரத்தில் தொங்குகிறது.அணைக்கட்டு கான்கிரீட் சுவர்களில் மரங்கள் வளர்ந்து அதன் உறுதி தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.நுாற்றாண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி தரும் அணைக்கட்டில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.பருவ மழை துவங்குவதற்கு முன், அதிகாரிகள் வல்லுார் அணைக்கட்டு பகுதியை முழுமையாக ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.