| ADDED : ஜூன் 19, 2024 01:15 AM
திருவள்ளூர்:சுடுகாட்டுக்கு சிமென்ட் சாலை அமைக்க அரசு ஒதுக்கீடு செய்த, 2.39 லட்சம் ரூபாயில் முறைகேடு நடந்ததால், பணி முழுதும் நிறைவடையவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெமிலி அகரம் ஊராட்சி. திருத்தணி - பூண்டி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இந்த கிராமம் அமைந்து உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள கீழ்விளாகம் பட்டியலினத்தவர் காலனியில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து, பூண்டி ஊராட்சி ஒன்றிய சார்பில், கீழ்விளாகம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடந்த, 2023-24ல் 2.39 லட்சம் ரூபாய் மதிப்பில் சுடுகாட்டுக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.ஆனால், இப்பணி அரைகுறையாக நடந்துள்ளது. கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு மேல் பணி நடக்காமல், குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அரசு வழங்கிய நிதியில், ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வை செய்த, பூண்டி ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமே என, சமூக ஆவர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.எனவே, அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தி, சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.