ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், கைத்தறி நெசவாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் வாயிலாக நெசவாளர்கள் தொழில் வாய்ப்பு பெற்று நெசவு செய்து வருகின்றனர். சங்கத்தின் தலைவர்கள் இந்த பணிகளை நிர்வகித்து வருகின்றனர். கைத்தறி சங்கங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலை ரகங்கள், இலவச வேட்டி சேலை திட்டத்தின் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு நெசவுக்கு பாவு மற்றும் ஊடை நுால் வழங்கப்படவில்லை. இதனால், கைத்தறி நெசவாளர்கள் தொழில் செய்ய முடியாமல் முடங்கியுள்ளனர். தற்போது, நெசவாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூலியை நேரடியாக நெசவாளரின் வங்கி கணக்கில் செலுத்துவதால் நெசவாளர்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால், துணி நெசவு செய்தால் மட்டுமே கூலி வரவு வைக்கப்படும். நெசவு செய்ய மூலபொருட்களை ஆண்டு முழுதும் வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.கூட்டுறவு சங்க தலைவர்கள் வாயிலாக கூலி பெற்ற போது, நெசவு செய்ய மூலப்பொருட்களான பாவு, ஊடை நுால் வழங்கப்படாத காலகட்டத்தில், சங்க தலைவர்கள், நெசவாளர்களுக்கு மனிதாபிமானத்துடன் பண உதவி செய்து வந்தனர். பின், அதை திரும்ப பெற்று வந்தனர். ஆனால், தற்போது அந்த பண பரிவர்த்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.‛குறுகிய கால லோன் வேண்டும்'நெசவு செய்த சேலைக்கு ஊரிய கூலி கடந்த சில ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கூலி வழங்கப்படும் வரை சங்க தலைவர்கள் மற்றும் இதர உறுப்பினர்களிடம் கடன் வாங்கி நிலைமையை சமாளித்து வந்தோம். தற்போது நேரடியாக வங்கி கணக்கிற்கு கூலி வரவு வைக்கப்பட உள்ளது. இந்த வங்கி பரிவர்த்தனை திட்டத்தின் வாயிலாக குறுகிய கால கடன் வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.-என்.பி.விசு, 36, நெசவாளர், பொதட்டூர்பேட்டை.
90 நாட்கள் வேலை போதுமா?
கைத்தறியில், ஆண்டுக்கு மூன்று மாதங்கள் தான் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மூன்று மாத வருவாயும், கடந்த சில ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்கள் வேலை செய்து, ஆண்டு முழுதும் குடும்பம் நடத்த முடியாத சூழலில் தவித்து வருகிறோம். வங்கி கணக்கில் கூலி வழங்கும் நடைமுறையால் மட்டும் கைத்தறி நெசவாளர்கள் வாழாவாதாரம் உயர்ந்து விட வாய்ப்பு இல்லை. தொடர்ந்து ஆண்டு முழுதும் தொழில் நடத்த ஏதுவாக, பாவு மற்றும் ஊடை நுால் வழங்கவும் நடவடிக்கை தேவை.கே.இ.வெங்கடேசன், நெசவாளர், பொதட்டூர்பேட்டை.