| ADDED : மே 28, 2024 05:58 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் ஜே.என். சாலை-அய்யனார் அவென்யூ செல்லும் சாலையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால், அங்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.திருவள்ளூர் பெரியகுப்பத்தில் இருந்து பேருந்து நிலையம் சாலையில், தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், எல்.ஐ.சி.,க்கு சற்று முன்பாக, பொதுப்பணித் துறை கால்வாயை ஒட்டி, காலியாக உள்ள இடத்தில், சமீப காலமாக, மீன் இறைச்சி, சிக்கன் கடைகள் மற்றும் காய்கறிக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.இவற்றை வாங்க வருவோர், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால், ஜே.என்.சாலையில் இருந்து அய்யனார் அவென்யூ செல்லும் சாலையில் செல்வோருக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பிரதான சாலையிலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு அருகிலேயே இரண்டு தனியார் திருமண மண்டங்கள் உள்ளன. இங்கு வருவோரின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், அய்யனார் அவென்யூ செல்லும் சாலையை மறித்து நிறுத்து கின்றனர்.முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆக்கிரமிப்பு கடை மற்றும் வாகனங்களால், பகுதிவாசிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், கடைக்காரர்களின் திடீர் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றாவிட்டால், கட்டடங்களாக மாறும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.