பழவேற்காடு:பழவேற்காடு ஏரியின் தெற்கு பகுதியில் பசியாவரம், இடமணி, இடமணி ஆதிதிராவிடர் காலனி, ரக்மத் நகர், சாட்டன் குப்பம் ஆகிய ஐந்து மீனவ கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களை சுற்றிலும் ஏரியின் பரப்பு அமைந்துள்ளது. மழைக்காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக, இங்குள்ள மீனவ மக்கள் படகுகள் உதவியுடன், பழவேற்காடு பஜார் பகுதிக்கு வந்து சென்றனர்.இந்த கிராமங்களை சுற்றிலும், 3 - 4 மாதங்களுக்கு ஏரியில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பள்ளி மாணவர்கள் உட்பட மீனவர்கள் தினமும் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொண்டனர்.இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, பழவேற்காடு - பசியாவரம் இடையே உள்ள ஏரியின் குறுக்கே, 18.20 கோடி ரூபாய் நிதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள், கடந்த 2020ல் துவக்கப்பட்டது.பொன்னேரி - பழவேற்காடு சாலையில் இருந்து, பசியாவரம் கிராமம் வரை, 7 மீ., அகலம் மற்றும் 432 மீ., நீள ஓடுபாதையுடன் பாலத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதற்காக ஏரியில், 20 கான்கிரீட் துாண்கள், அதன் மீது ஓடுதளம், பக்கவாட்டு பகுதிகளில் தடுப்புச்சுவர், அணுகு சாலைகள் ஆகியவற்றிற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன.பசியாவரம் பகுதியில் இருந்து, சாட்டன்குப்பம், இடமணி உள்ளிட்ட கிராமங்களுக்கான அணுகு சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அடுத்த சில நாட்களில் பாலப் பணிகள் முழுமை பெற்றுவிடும். லோக்சபா தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள், ஜூன் 4க்கு பின் முடிவுக்கு வரும். அதன்பின், பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஐந்து மீனவ கிராமங்களில் நீண்டகால பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க உள்ளது.