அம்பத்துார்:மாநகராட்சி பகுதிகளில், ஆளுங்கட்சியினர் உதவியுடன் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, 'நாள் வாடகை' வசூலிக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளில், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.சென்னை அம்பத்துார், மாதவரம், கொளத்துார், திரு.வி.க., நகர், அண்ணா நகர் மண்டலங்களில் உள்ள பிரதான சாலைகளில், மாநகராட்சி நிர்வாகம் பல கோடி ரூபாய் செலவில், 10 முதல் 20 அடி அகலம் வரை, நடைபாதைகள் அமைத்துள்ளது.அதில், 'நடைபாதை நடப்பதற்கே' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.ஆனால், நடைபாதைகள் அனைத்தும், ஆளுங்கட்சி பிரமுகர்கள்,'ஆசி'யுடன் ஆக்கிரமிக்கப்படுகிறது. முதலில், 10 அடி அகலம், 10 அடி நீளம் என்ற அளவில், சிறிதாக ஆக்கிரமிக்கப்படுகிறது.அதன் பிறகு படிப்படியாக, 50 முதல், 100 அடி வரை ஆக்கிரமிப்பு வளர்ந்து விடுகிறது. சராசரியாக, மேற்கண்ட மண்டலங்களின் பிரதான சாலைகளில், 100 முதல் 200 நடைபாதை கடைகள் உருவாகின்றன. அதில், 50 சதவீத கடைகள் மட்டுமே, மாநகராட்சியின் அனுமதி பெற்று, சிறுகடை வியாபாரமாக அனுமதிக்கப்படுகின்றன. மற்றவை ஆளுங்கட்சி பிரமுகர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அந்தந்த பகுதி போலீசார் 'ஆசி'யுடன், நிரந்தர ஆக்கிரமிப்பாக உள்ளன.குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு வேகமாக அதிகரித்துள்ளது.அந்த வகையில், ஒவ்வொரு மண்டலத்தின் பிரதான சாலைகளிலும், 1,500 நடைபாதை கடைகள் வரை முளைத்துள்ளன. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும், வெவ்வேறு நபர்கள் தள்ளுவண்டி, வேன், ஆட்டோ ஆகியவற்றில் சூப், பர்மா உணவு, டிபன், விரைவு உணவகம் மற்றும் பிரியாணி கடைகள் போடுகின்றனர்.அவற்றால் வெளியேற்றப்படும் உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் கொட்டப்படுகின்றன. அவை, அதில் தடுப்பாக அடைத்து பிரச்னை ஏற்படுகிறது.அதனால், பருவ மழையின் போது, சென்னை மாநகராட்சி பகுதிகளில், வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், அந்த கடைகளில் உணவு சாப்பிடுவோர் பயன்படுத்தும் தண்ணீர், சாலையில் தேங்கி விடுகிறது. நடைபாதை கடைகளால் சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகின்றன.மேலும், நடைபாதை கடைகளுக்கு உணவு, காய்கறி, பழம் என பல்வேறு பொருட்களை வாங்க வருவோர், தங்களது வாகனங்களை, சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.அதனால், வேறு வழியின்றி அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், சாலையில் இறங்கி நடக்கும் போது, வாகன விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தாலும், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் நடைபாதை கடைகளால், சென்னையை மேம்படுத்தும் எந்த திட்டத்தையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது.அதே நேரம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீற வேண்டிய நெருக்கடியும் ஏற்படும். மேலும், அங்குள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.பயணியர் ஒதுங்கி கூட நிற்க முடிவதில்லை. ஆனால், மாநகராட்சி மற்றும் போலீசாரிடம் இது குறித்து விசாரித்தால், அது அவர்களின் சுயதொழிலுக்கான வாழ்வாதாரம். அவர்களை எப்படி அகற்றுவது என, 'நியாயம்' பேசுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாடகை
நடைபாதை கடைகள் வாயிலாக, ஒரு நாள் வாடகையாக, வருவாய்க்கு ஏற்றபடி, 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வசூலித்துக் கொள்கின்றனர். அதனால், கடைக்கான வாடகை, மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள் இல்லை. சில இடங்களில், கடையை பிடித்துக் கொடுக்க, கணிசமான தொகையும் வசூலிக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில், அருகில் உள்ள மின் மாற்றி, மின் பகிர்மான பெட்டிகளில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்திக் கொள்ளவும், அத்துறையின் ஊழியர்கள் மூலம், மறைமுக அனுமதி அளிக்கப்படுகிறது.
விபத்திற்குகாரணம்
ஆக்கிரமிப்பு கடைகளின் அடுப்புகள், சாலையில் வைத்து உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அதனால், அந்த இடத்தை கடந்து செல்வோர், நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. மேலும், விரைவு உணவில் துாவப்படும் மிளகாய் துாள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் காற்றில் பறந்து பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்ணில் பட்டு, விபத்து ஏற்படுகிறது. காற்றாடி விடும் மாஞ்சா நுால் விபத்து போல், இதுவும் வாகன ஓட்டிகளை பாதிப்பது குறிப்பிடத்தக்கது.