| ADDED : ஜூன் 08, 2024 05:35 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், சாலையில் மழைநீர் தேங்கி குளமானது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி உட்பட, மாவட்டத்தில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் காமராஜபுரத்தில் கன மழையால் மூங்காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள தெருவில் மழை நீர் திடீர் குளமாக தேங்கியது. வடிகால்வாய் இல்லாததால் மழை நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி உள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் உள்ளது. எனவே, இச்சாலையை சீரமைத்து, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.