| ADDED : ஆக 19, 2024 11:14 PM
திருவள்ளூர்: சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வலியுறுத்தி, கிராமவாசிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.ஆர்.கே.பேட்டை தாலுகா, அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டர் காலனி, கொண்டாபுரம் கிராமவாசிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்ட, கொண்டாபுரம், ஒட்டர் காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு, ஒட்டர் காலனியில் 3 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை , ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலர்கள் அளவீடு செய்து, சர்வே எண்.385/6-ல் எல்லை கற்கள் அமைத்துள்ளனர்.அந்த இடத்தில், கிராமவாசிகள் சார்பில், 3 அடி உயரத்தில் மண் சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், சிலர், மயான இடத்தை ஆக்கிரமித்து, எல்லை கற்களை அகற்றி உள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மயான இடத்தை மீட்க வேண்டும். மேலும், மயான இடத்தில், சுற்றுச்சுவர், ஆழ்துளை கிணறு, எரிமேடை உள்ளிட்ட வசதி செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.