மேலும் செய்திகள்
ஆண்டிபாளையத்தில் மீண்டும் படகு சவாரி
24-Dec-2024
பழவேற்காடு:பழவேற்காடில் தடையை மீறி, சுற்றுலாப் பயணியரை படகு சவாரிக்கு அழைத்து சென்றால், படகுகள் பறிமுதல் மற்றும் படகோட்டிகள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என, மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனப் பகுதியில், 40 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. பழவேற்காடு ஏரியானது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக, ஆந்திர மாநிலம் வரை பரவி இருக்கிறது. ஆரணி ஆறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக வரும் நன்னீர், முகத்துவாரம் வழியாக வரும் கடல்நீர் சேர்ந்த உவர்ப்பு நீர் ஏரியாக இது உள்ளது. பல்வேறு வகையான பறவைகளை கொண்ட சரணலாய பகுதியாகவும் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. பல்வேறு பன்முக பண்புகளை கொண்டதாக பழவேற்காடு ஏரி அமைந்து உள்ளது. இதனால், பழவேற்காடு ஏரியில், படகு சவாரி செய்வதற்கு சுற்றுலாப் பயணியர் விரும்புவர். இதற்காக, எந்தவித பாதுகாப்பும் இன்றி, சுற்றுலாப் பயணியர் மீன்பிடி படகுகளில் படகு சவாரிக்கு செல்லும்போது, அவ்வப்போது அசம்பாவிதங்கள் நேரிடுகின்றன.கடந்த, 2011, டிசம்பர் 25ம் தேதி, பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணியரை சவாரி ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 22 பேர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.தடையை மீறி படகு சவாரிக்கு, சுற்றுலாப் பயணியரை அழைத்து சென்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது. தற்போது வரை அந்த தடை நீடிக்கிறது.அதே சமயம் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் தடையை மீறி, சுற்றுலாப் பயணியர் படகு சவாரிக்கு அழைத்து செல்வது தொடர்கிறது. லைப் ஜாக்கெட், கயிறு, மிதவைகள் உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சுற்றுலாப் பயணியர், பழவேற்காடு ஏரி மற்றும் அங்குள்ள தீவுப்பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.இதனால், மீண்டும் பெரிய அளவிலான அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் நாளில், பழவேற்காடில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வருகை தருவர். அவர்கள் கடற்கரையில் கூடி, கடல் அலைகளில் விளையாடி மகிழ்வர். இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணியர் பழவேற்காடில் குவிவர், அவர்களை படகு சவாரிக்கு அழைத்து செல்லும்போது ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க, திருப்பாலைவனம் போலீசார் மீனவ கிராம நிர்வாகிளுக்கு சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை செய்து உள்ளனர். அதில் உள்ளதாவது:பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி ஒரு சில மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணியரை படகு சவாரிக்கு அழைத்து செல்வது தெரிய வந்து உள்ளது.பாதுகாப்பு இன்றி படகு சவாரி செய்வதால் அசம்பாவிதங்கள் நேரிடும். இனிவரும் காலங்களில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தடையை மீறி படகு சவாரி செய்யக்கூடாது. கிராம கூட்டங்கள் வாயிலாக, படகு வைத்து உள்ளவர்களிடம் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். மீறினால், காவல்துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் உள்ளது.இது குறித்து திருப்பாலைவனம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் கூறியதாவது:தடையை மீறி, சுற்றுலாப் பயணிரை படகு சவாரிக்கு அழைத்து செல்வது தெரிய வந்தால், படகோட்டிகள் மீது சட்ட நடவடிக்கை பாயும். மீன்வளத் துறையின் வாயிலாக படகுகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து அனைத்து மீனவ கிராமத்தினருக்கு சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்து உள்ளோம். எஸ்.ஐ., தலைமையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.சுற்றுலாப் பயணியரும் படகு சவாரி தடையை பின்பற்றி போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். மீனவர்களின் ஒத்துழைப்புடன், படகு சவாரி தடை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
24-Dec-2024