| ADDED : ஜூன் 10, 2024 06:35 AM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம், பெரும்பேடு, ஆசானபூதுார் கிராமங்களின் ஏரிகளுக்கு மழைநீர் கொண்டு செல்லும் ஓடை கால்வாய் ஒன்று பெரியகாவணம், கூடுவாஞ்சேரி, பரிக்குப்பட்டு, உப்பளம், மடிமைகண்டிகை வழியாக பயணிக்கிறது.இதில் பொன்னேரி அடுத்த பரிக்குப்பட்டு கிராமத்தில், நிலத்தடி நீர்பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு உள்ளது.மழைக்காலங்களில் தடுப்பணை பகுதியில் தேங்கும் மழைநீர், நிலத்தடி நீர் பாதுகாக்கபடுவதால் அருகில் விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் செயல்பாடும் நல்ல நிலையில் இருந்து வருகிறது.இந்நிலையில், மேற்கண்ட தடுப்பணை தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், தற்போது முற்றிலும் சேதம் அடைந்து கிடக்கிறது.மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேங்க வழியின்றி உடைப்பு மற்றும் ஓட்டைகள் வழியாக வெளியேறி விடுகிறது.கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்துவரும் மழையால் தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. அதே சமயம் உடைப்புகள் வழியாக தேங்கிய தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.பரிக்குப்பட்டு கிராமத்தில் சேதம் அடைந்து கிடக்கும் தடுப்பணையை சீரமைத்து, மழைநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.