| ADDED : ஆக 09, 2024 01:00 AM
ஆர்.கே.பேட்டை:-ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை ஒட்டிய இஸ்லாம் நகரில், 250 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் படிக்கும் சிறுவர்கள், ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பஜார் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களும், ஆண்கள் மேல்நிலை பள்ளியை கடந்து தான் அவரவர் பள்ளிக்கு செல்ல வேண்டும்.இந்நிலையில், ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே, மாநில நெடுஞ்சாலையில் மழைநீர், குளம் போல் தேங்கி நிற்கிறது.ஒரு நாள் மழை பெய்தாலும், இரண்டு வாரங்களுக்கு இங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையோரத்தில், மழைநீர் கால்வாயும் கட்டப்பட்டுள்ளது.ஆனால், மழைநீர் அந்த கால்வாயை சென்றடைவது இல்லை. ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியிலும் இதே போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.மழைநீர் கால்வாய் கட்டி முடித்த நான்கு ஆண்டுகளாகவும் இந்த நிலை தொடர்கிறது. கால்வாயை மீண்டும் துார் வாரி சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.