திருப்போரூர்:சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சரத்சந்திரன், 28. ஐ.டி., ஊழியர். இவருக்கும், கண்டிகை பகுதியை சேர்ந்த காயத்ரி, 22, என்பவருக்கும், கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்விற்காக, காயத்ரி கணவருடன், கண்டிகையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை, சரத்சந்திரன் சிறுசேரிக்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து, மதியம் 1:00 மணியிலிருந்து மாலை வரை, மொபைல் போனில் காயத்ரியை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.பின், சரத்சந்திரன், காயத்ரியின் தந்தைக்கு போன் செய்து, காயத்ரி போன் எடுக்கவில்லை; என்ன என்று பாருங்கள் என, கூறியுள்ளார்.காயத்ரியின் பெற்றோர், அவர் வீட்டில் இல்லாததால், இரவு வரை தேடி வந்தனர். காயத்ரியின் கைப்பை வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு அருகில் இருப்பதாக, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர். பின், காயத்ரியின் பெற்றோர் கிணற்றுக்கு சென்று பார்த்தபோது, அதில் காயத்ரி உடல் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுதொடர்பாக, இரவு 10:25 மணிக்கு தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார், தீயணைப்பு படையினர் வாயிலாக சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், தற்கொலையா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என, பல கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.