பொன்னேரி: பொன்னேரி காவல் சரகத்தில் பொன்னேரி, திருப்பாலைவனம், மீஞ்சூர், காட்டூர், சோழவரம் ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.கடந்த 2022ல் சோழவரம், மீஞ்சூர், காட்டூர் காவல் நிலையங்களும், கடந்த பிப்., 1ம் தேதி முதல் பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்களும் ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்டன.இந்த ஐந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் பிரச்னைகள், போக்சோ, குடும்ப தகராறு உள்ளிட்டவைகளை விசாரிக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வந்தது.தற்போது, இந்த அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கு விசாரணைகள் மற்றும் மகளிர் தொடர்பான புகார்கள், சென்னை அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.இதனால், புகார்தாரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புகாரின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள புகார்தாரர்கள் அம்பத்துார் செல்ல வேண்டிய நிலையே உள்ளது.புகார்தாரர்கள், 25 - 65 கி.மீ., தொலைவு பயணித்து, அம்பத்துார் மகளிர் காவல் நிலையம் செல்லும் சூழல் உள்ளது. இதனால் புகார்தாரர்கள் விரக்தி அடைகின்றனர்.சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய அதிகாரிகளும், மகளிர் புகார்கள் குறித்து சரிவர விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.எனவே, இந்த ஐந்து காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் எளிதாக புகார் அளித்து தீர்வு காணும் வகையில், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.அங்கு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.