| ADDED : ஜூலை 21, 2024 06:45 AM
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட காப்புக்காடு சிறந்த நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. இந்த காடுகளில் பெய்யும் மழைநீர், ஓடைகளாக, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்குள் பாய்கிறது. இதில், நாகபூண்டி ஏரி முதலாவதாக நிரம்புகிறது. அதை தொடர்ந்து வீரமங்கலம், அஸ்வரேவந்தாபுரம் ஏரிகள் நிரம்புகின்றன. இந்த ஏரிகள் நிரம்பி ஞானகொல்லிதோப்பு வழியாக பாய்ந்து கொசஸ்தலை ஆற்றில் கலக்கின்றன. இந்நிலையில், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தினசரி மழை பெய்து வருகிறது. இதனால், பாலாபுரம், விடியங்காடு, தேவலாம்பாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓடைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது பெய்துவரும் மழை தொடரும் பட்சத்தில், அடுத்த சில நாட்களில், இந்த தடுப்பணைகளை தாண்டி வெள்ளம் பாய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.