| ADDED : ஏப் 29, 2024 06:26 AM
பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி நாவலர் தெருவில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி, 10 நாட்களாக பணிகள் துவங்காததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பூந்தமல்லி அருகே கரையான்சாவடி - சென்னீர்குப்பம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்த நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட கரையான்சாவடி நாவலர் தெரு இணையும் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, 5 அடி ஆழத்திற்கு 10 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெறாமல் உள்ளன.இதனால், நாவலர் தெரு வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரபொதுமக்களும் பள்ளம் தோண்டபட்ட இடத்தின் அருகே, சிறிய வழியில் ஆபத்தான முறையில் நடந்து சென்று அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நாவலர் தெரு மக்கள் கூறியதாவது:பூந்தமல்லி நகராட்சி நாவலர் தெரு வழியாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்று வருகின்றோம். சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி, பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் இந்த வழியே வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுஉள்ளோம். மேலும், பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளத்தில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், சிறுவர்களை விளையாட வெளியே அனுப்ப அச்சமாக உள்ளது. யாராவது தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.