உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீயணைப்பு நிலையம் இல்லாததால் கரும்பு விவசாயிகள் பாதிப்பு

தீயணைப்பு நிலையம் இல்லாததால் கரும்பு விவசாயிகள் பாதிப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை தாலுகாவில் கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கரும்பு சாகுபடியில் ஒரு முறை நடவு செய்தால், மூன்று முறை அறுவடை செய்யலாம். இதனால், நடவு செலவு விதை கரும்பு தேவை குறைகிறது. கரும்புக்கு நிலத்தடி சொட்டுநீர் பாசன முறை கையாளப்படுவதால், தண்ணீர் தேவை குறைவு. அதே சொட்டுநீர் பாசனத்துடன் உரம் கலந்து செலுத்தப்படுவதால் செடிகளுக்கு தேவையான உரம் சரியான விகிதத்தில் கிடைத்து விடுகிறது.

நீண்டகால பயிர்!

கரும்பு பருவம் ஓராண்டு கால வளர்ச்சி கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம் என்பதால் நீண்டகால பயிராக விளங்குகிறது. அறுவடை பணியை சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வந்திருந்து சிறப்பாக நடத்தி தருகின்றனர்.அறுவடை செய்யப்படும் கரும்பு, உள்ளூர் ஆலைகளில் வெல்லம் தயாரிக்கவும், சர்க்கரை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக வருவாய் கிடைக்க வழிவகுக்கிறது.இந்த அனுகூலங்களால், ஆர்.கே.பேட்டை தாலுகாவில் கரும்பு பயிரிட விவசாயிகள் அதிகளவில் முன்வருகின்றனர்.

கர்ணம் தப்பினால்...

இந்நிலையில், கரும்பு அறுவடைக்கு பின், தோட்டத்தில் வேர் பகுதியை ஒட்டிய தோகைகளை தீயிட்டு விவசாயிகள் அழிக்கின்றனர். அவ்வாறு தீயிட்டு அழித்தால் மட்டுமே அடுத்த பருவத்திற்கான துளிர் செழிப்பாக வளரும். தீ வைத்து எரிக்கப்படும் கரும்பு வயலில் கொழுந்து விட்டு எரியும் தீ, அருகில் உள்ள வயல்களுக்கு பற்றிக்கொள்ளாமல் லாவகமாக கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு சவாலான விஷயம். இதில் கவனக்குறைவாக இருந்தால், அருகில் உள்ள தோட்டங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளும் ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மேலும், வயல்வெளி வழியாக செல்லும் மின்கம்பிகளாலும் மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டங்களில் தீவிபத்து நேரிடுவது உண்டு. அந்த சமயத்தில், பள்ளிப்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து தீயணப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. அருகில் உள்ள தாலுகா மற்றும் மாவட்டத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள், கரும்பு தோட்டம், தீயில் எரிந்து நாசம் ஆகின்றன.தீ விபத்து நேரிட்டால் உடனடியாக சம்பவ இடத்தை தீயணைப்பு வாகனங்கள் அணுக வசதியாக ஆர்.கே.பேட்டை தாலுகாவில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு கிடங்கு திறப்பு

பள்ளிப்பட்டு தாலுகாவில் இருந்து, ஆர்.கே.பேட்டை தாலுகா தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பள்ளிப்பட்டு உணவு பாதுகாப்பு கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் பகுதியில் ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு புதிய உணவு பாதுகாப்பு கிடங்கு கடந்த வாரம் புதிதாக திறக்கப்பட்டது. அதே போல், ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு புதிய தீயணைப்பு நிலையம் துவக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை