அயனாவரம்:அயனாவரம், சோமசுந்தரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் விகாஸ், 40. இவர், அதே பகுதியில், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தில், ஓட்டேரியைச் சேர்ந்த சத்யராஜ், 30, அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 27, இருவரும் விற்பனை பிரதிநிதிகளாக வேலை செய்தனர்.வேலைக்கு சரியாக வராததால், ஆறு மாதங்களுக்கு முன் இருவரையும் வேலையில் இருந்து விகாஸ் நீக்கி உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன், கெஞ்சி கேட்டு மீண்டும் இருவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஆனால், வேலையில் சேர்ந்தது முதல் தினமும் தாமதமாக வருவதை, சத்யராஜ் வழக்கமாக கொண்டுள்ளார்.இதனால், நேற்று முன்தினம் இரவு, விகாஸ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ், விக்னேஷ் இருவரும், மதுபோதையில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில், விகாசின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடியை உடைத்து தப்பினர்.இதுகுறித்த புகாரின்படி, இருவரையும் அயனாவரம் போலீசார் நேற்று காலை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில், சத்யராஜ் ரவுடியாக வலம் வந்ததும், அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.