உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கள்ளச்சாராய மரணம் எதிரொலி திருவள்ளூரில் தொடரும் வேட்டை

கள்ளச்சாராய மரணம் எதிரொலி திருவள்ளூரில் தொடரும் வேட்டை

திருவள்ளூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷசாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.இதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் மாவட்டம் முழுதும் அதிரடிசோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய சப் - டிவிஷன்களில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.இந்த சோதனையில் மாவட்டம் முழுதும் நேற்று அதிகாலை வரை கள்ளச்சந்தையில் மது கடத்திய மற்றும் விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 21 பேர் கைது செய்யப்பட்டனர். 1,519 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் காக்களூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தலா 2 தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகளில் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் டி.எஸ்.பி.க்கள்., கிரியாசக்தி, அழகேசன் தலைமையில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மெத்தனால் இருப்பு சரியாக உள்ளதா என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மெத்தனால் எங்கு இருந்து வருகிறது, வாங்குபவர்கள் மற்றும் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தகவல் அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுதும் சோதனை தொடரும் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி