| ADDED : ஜூலை 30, 2024 06:45 AM
திருவள்ளூர்: பூண்டி, கடம்பத்துார் கால்நடை மருத்துவமனைகள், 40 ஆண்டுகளாகிவிட்டதால், பாழடைந்த இரு கட்டடங்களும் 'நபார்டு' திட்டத்தின் கீழ் நிதி பெற்று புது கட்டடம் கட்டப்படும் என, கால்நடை மண்டல துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் வட்டம், கடம்பத்துாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதர் என்பவர், சென்னை கால்நடை பராமரிப்பு இயக்குனர் அலுவலக பொது தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அனுப்பிஉள்ள மனு:கடம்பத்துார் கால்நடை மருத்துவமனை, 1967ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் திறக்கப்பட்டது. கட்டடம் கட்டப்பட்டு, 57 ஆண்டுகள் ஆனதால், தற்போது இம்மருத்துவமனை வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதுகுறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானதும், திருவள்ளூர் மண்டல இயக்குனர் ஆய்வு செய்து, பூண்டி மற்றும் கடம்பத்துாரில், 'நபார்டு' திட்டத்தில் நிதி பெற்று புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாக, பரிந்துரை கடிதம், டிச.,ல் அனுப்பி வைத்தார்.இதுவரை புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை. இதற்கான மேல் நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டுள்ளது. எப்போது புதிய கட்டடம் கட்டப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு, சென்னை கால்நடை பராமரிப்பு மண்டல பொது தகவல் அதிகாரி மற்றும் துணை இயக்குனர் அனுப்பியுள்ள பதிலில், '2024 - 25ம் ஆண்டு சட்டசபை அறிவிப்பு வெளியிட்ட பின், அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் அடிப்படையில், கட்டட நிர்வாக அனுமதி மற்றும் நிதி அனுமதி பெறப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்படும்' எனக் கூறியுள்ளார்.