ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை -- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, தேவந்தவாக்கம், ஒதப்பை, நெய்வேலி கூட்டுச்சாலை, சதுரங்கப்பேட்டை, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள், மாணவ - மாணவியர் திருவள்ளூர் செல்ல மேற்கண்ட வழியே செல்ல வேண்டும்.திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை, வரதயபாளையம், காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் ஊத்துக்கோட்டை வழியே தான் செல்ல வேண்டும். ஊத்துக்கோட்டை - - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் தினமும், 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதாக திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.கடந்த, 1990ம் ஆண்டு மேற்கண்ட நெடுஞ்சாலையில், ஒதப்பை பகுதியில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் தோண்டப்பட்டது. அதன்மேல் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கால்வாயின் மேல் மேம்பாலம் கட்டப்பட்டது. துவக்கத்தில் முறையான பராமரிப்பு இருந்தது. தற்போது பராமரிப்பு இல்லாததால், பாலத்தின் இரண்டு பக்கமும் செடிகள் வளர்ந்து அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.