பள்ளி நேரத்தில் மண் எடுத்து சென்ற லாரி சிறைபிடிப்பு
நெமிலி,:நெமிலி அருகே, சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை விரிவாக்க பணிக்கு, பள்ளி நேரங்களில் லாரிகளில் மண் எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக பனப்பாக்கம் அடுத்து ஆலப்பாக்கத்தில் இருந்து, லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது.இவ்வாறு மண் எடுத்து செல்லும் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலையில் துாசு மற்றும் மண் பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இதனால், ஆத்திரமடைந்த நெடும்புலி கிராம மக்கள், மண் ஏற்றிச் சென்ற, 15 லாரிகளை நேற்று காலை 9:00 மணியளவில் சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். நெமிலி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, 'பள்ளி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது' என கூறி, மறியலை கைவிட செய்தனர்.