உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் ஆடிப்பரணி இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி கோவிலில் ஆடிப்பரணி இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா, நேற்று முன்தினம் ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று ஆடிப்பரணி முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், இன்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பம் நடக்கிறது. நேற்று ஆடிப்பரணி என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் திருத்தணிக்கு வந்தனர். பின், மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும் காவடிகள் எடுத்தும், முருகப்பெருமானை தரிசித்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை, இரண்டு லட்சம் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசித்தனர்.

6 மணி நேரம் காத்திருப்பு

மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டனர்.மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மலைப்படிகள் வழியாக, சரவணபொய்கைக்கு வந்து, குளத்தை ஒருமுறை வலம் வந்து, மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். மேலும், 1,900க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கார் பாஸ் வைத்திருந்த வாகனங்களுக்கு மட்டும், முருகன் மலைக்கோவில் வரை போலீசார் அனுமதித்தனர்.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோகநரசிம்மர் மலைக்கோவில். ஆடிக்கிருத்திகையை ஒட்டி திருத்தணி முருகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேற்று முன்தினம் முதல் சோளிங்கர் மலைக்கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், ரோப்கார் வளாகத்தில் பக்தர்கள் ஏராளமாக குவிந்துள்ளனர். ரோப்கார் வளாகத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் பக்தர்களின் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்துள்ளன.

பக்தர்கள் அவதி

முருகன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை முதல் வெளியூர் பேருந்துகள், திருத்தணி நகருக்கு வெளியே 2 - 3 கி.மீ., துாரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், வயதான பக்தர்கள் மலையடிவாரம் மற்றும் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு கடும் சிரமப்பட்டனர். சிலர் அதிக கட்டணம் கொடுத்து, ஆட்டோக்கள் வாயிலாக, மலைப்பாதை அருகே சென்றனர். இதனால், வாகனங்களில் வந்த பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களுக்கு தடை

வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருசக்கர வாகனங்களில், காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு செல்ல வந்தனர். ஆனால், காட்ரோட்டில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில், பாஸ் வைத்திருந்த நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இரு சக்கர வாகனங்களை மலைக்கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்காததால், நீதிமன்ற அலுவலகம் அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தினர். அங்கு, இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமில்லாமல் சிரமப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால், சில பக்தர்கள் மலைக்கு செல்லாமல், கோவிலின் நுழைவு பாதையிலேயே காவடிகளை செலுத்திவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை