| ADDED : மே 31, 2024 02:47 AM
திருத்தணி, :மும்பையில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா, புத்துார் நகரி, திருத்தணி வழியாக சென்னை நகருக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின்படி ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.அப்போது இரண்டு வாலிபர்கள் ரயில் நிலையத்தில் பையுடன் உட்கார்ந்திருந்ததை கண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் மதிப்பு, 3 லட்சத்து 67 ஆயிரத்து, 500 ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். போதை மாத்திரைகள் கடத்தி வந்தவர்கள் சென்னை கண்ணகிநகரை சேர்ந்த யுவராஜ், 27, நீலாங்கரையை சேர்ந்த மோகன், 24 என தெரிய வந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் திருத்தணி ரயில் நிலையத்தில் திருத்தணி போலீசார் போதை மாத்திரைகள் கடத்தி வந்த நால்வரில் இருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.