| ADDED : மே 11, 2024 01:15 AM
பொன்னேரி:தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 1,000த்துக்கும் அதிகமான சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்படி, காப்பீடு பெற்ற ஒரு குடும்பம் ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகம் பின்புறம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்து, அதற்கான அட்டை பெறுவதற்கான மையம் அமைந்து உள்ளது.இங்கு பயனாளிகள் வந்து எளிதாக திட்டத்தில் இணைந்து பயன் பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச்சில் மேற்கண்ட காப்பீடு திட்ட மையம் திடீரென பூட்டப்பட்டது.அங்குள்ள அறிவிப்பு பலகையில், 'மார்ச் மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் மையம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் எனவும், ஏப்., 1 முதல், பொன்னேரியில் வழக்கம்போல் செயல்படும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.ஆனால், இதுவரை மேற்கண்ட காப்பீடு அட்டை வழங்கும் மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தினமும், பயனாளிகள், காப்பீடு அட்டை பெறுவதற்காக மேற்கண்ட மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும் அவசர சிகிச்சை பெறுபவர்கள் காப்பீடு திட்டத்தில் இணைய முடியாமல் தவித்து வருகின்றனர்.மேற்கண்ட மையத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.