| ADDED : ஜூன் 09, 2024 11:10 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆண்டார்குப்பம், பெரவள்ளூர் கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், ஆரணி ஆற்றிற்கு மழைநீர் கொண்டு செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள பழமையான பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.இந்த பாலம், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட பாலமாகும். பழமையான கட்டடக்கலையை நினைவு கூறும் வகையில் உள்ள இந்த பாலம் தொடர் பராமரிப்பு இன்றி போனது. இதனால் பாலம் முழுதும் செடிகள், மரங்கள் வளர்ந்து பலவீனம் அடைந்து உள்ளது. ஒரு சில இடங்களில் செங்கற்கள் சரிந்து கிடக்கின்றன.மழைக்காலங்களில், கால்வாயில் அதிகப்படியான தண்ணீர் ஆரணி ஆற்றிற்கு செல்லும்போது, பாலத்தை கடக்க கிராமவாசிகள் அச்சப்படுகின்றனர். மாற்று பாதைகளில் சுற்றி பயணிக்கின்றனர்.பராமரிப்பு இன்றி உள்ள மேற்கண்ட பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்து, பழமை மாறாமல் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.