| ADDED : ஜூலை 22, 2024 05:51 AM
காசிமேடு: காசிமேடு மீன்பிடித் துறைமுகம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா கூட்டம் போல் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்மனுக்கு கூழ் ஊற்றி, படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதில், மீன் வகை உணவுகளும் இடம் பெறும். இதனால், நேற்று அதிகாலை முதலே, காசிமேடு மீன்படி துறைமுகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மீன்பிடிக்க சென்ற 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், வஞ்சிரம், வவ்வால், சங்கரா, வாளை, கானாங்கத்த, நவரை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகளவில் இருந்தது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, கடந்த ஒரு மாதமாக பெரிய மீன்கள் வரத்து வெகு குறைவாக இருந்த நிலையில், நேற்று வஞ்சிரம், கருப்பு வவ்வால் உள்ளிட்ட பெரிய மீன்கள் வரத்தும் இருந்தது.மீன் வரத்தும் அதிகரித்திருந்ததாலும், கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் மீன் விலையும் சற்று உயர்ந்திருந்தது. இருந்தும், மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.அதேபோல் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியிலும் மீன்வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.ஆடி மாத முதல் வார ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேடு மக்கள் கூட்டத்தால் திருவிழா போல் காட்சியளித்தது. மீன்களும் நல்ல விலைக்கு விற்பனையாயின. கடந்த வாரங்களில் மீன்கள் விற்பனையாகாத நிலையில், இந்த வாரம் மீன்கள் நல்ல விலைக்கு போனதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.- மீனவர்கள்,காசிமேடு.