எண்ணுார்:எண்ணுார், கடலும் ஆறும் இணையும் முகத்துவாரம் மற்றும் கழிமுகம் பகுதியில், மீன், நண்டு, இறால் உள்ளிட்ட பலவகை கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் அதிகளவில் இருக்கும்.முகத்துவாரம் மீன்வளத்தை நம்பி, சிவன்படை வீதிக்குப்பம், எண்ணுார் குப்பம், காட்டுகுப்பம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவார குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராமத்தினர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடிக்கடி ரசாயன நீர் கலப்பால் முகத்துவாரம் நிறம் மாறுவதுடன், கடல் வளம் அதிகளவில் பாதிக்கின்றன. சமீபத்தில், நான்கு முறைக்கும் மேல், நிறம் மாறும் பிரச்னை இருந்து வந்தது.இதனிடையே, கடந்த மூன்று நாட்களாக, முகத்துவாரம் மற்றும் கழிமுகம் பகுதி முழுதும் மஞ்சள் மற்றும் செந்நிறமாக காட்சியளிக்கிறது.சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் ரசாயன கழிவுகளால் தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு மாதிரிகளை எடுத்து சென்றனர். ஆனால், எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே சாம்பல் கழிவுகளால், முகத்துவாரம் முழுதும் தரையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், ரசாயன கழிவு பிரச்னையும் தொடர்கதையாக உள்ளது.'அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிடில், மீனவர்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.