திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 12 அங்கன்வாடி மையங்கள்
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், மொத்தம், 101 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 30க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு போதிய கட்டட வசதியின்றி தனியார் வாடகை கட்டடம் மற்றும் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தன.இந்நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஒன்றிய பொது நிதி மற்றும் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டன.தொடர்ந்து, வீரகநல்லூர், சூரியநகரம், தாடூர், பெரியகடம்பூர், திருத்தணி, கார்த்திகேயபுரம், பட்டாபிராமபுரம், வீரகநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், 12 பழுதடைந்த அங்கன்வாடி கட்டடங்களை இடித்து அகற்றி, ஒவ்வொரு அங்கன்வாடி புதிய கட்டடம், 13.50 லட்சம் ரூபாயில் கட்டடப்பட்டுள்ளன.இந்த கட்டடங்கள் கட்டி முடித்து ஆறு மாதங்கள் ஆகியும் திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் தற்போது அங்கன்வாடி மையங்கள் வாடகை வீட்டில் இயங்கி வருகின்றன. எனவே, மாவட்ட கலெக்டர் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள, 12 அங்கன்வாடி கட்டடங்களை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.