| ADDED : ஜன 11, 2024 12:59 AM
திருத்தணி:திருத்தணி நகரம் மேட்டுத்தெருவில் இருந்து ஜோதிநகர், டி.புதுார் வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்திற்கு, தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு மினி பேருந்து திருத்தணியில் இருந்து, 15 பெண் பயணியர் உட்பட மொத்தம், 22 பயணியரை ஏற்றிக் கொண்டு வளர்புரம் நோக்கி புறப்பட்டது. பேருந்தை சற்குணம், 35, என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ஸ்ரீதர், 30, என்பவர் வேலை செய்தார். மினி பேருந்து, டி.புதுார் கிராமத்தை கடந்து செல்லும் போது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஓட்டுனர், இடதுபுறமாக பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக, சாலையோர பள்ளத்தில் இருந்த தண்ணீரில் கவிழ்ந்தது.அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 22 பேரையும் மீட்டனர்.இந்த விபத்தில், 22 பயணியரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதில், பெண் ஒருவர் மட்டும் பள்ளத்தில் இருந்த தண்ணீரை அதிகளவில் குடித்ததால் மயங்கினார். உடனடியாக, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.