திருவள்ளூரில் 593 நீர்நிலைகள் 100 சதவீதம் நிரம்பின
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் ஏரிகள், சிறு குளங்கள் என மொத்தம் 3,877 நீர்நிலைகளில் 593 நீர்நிலைகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 3,296 ஏரிகள், குளங்கள் என மொத்தம் 3,877 நீர்நிலைகள் உள்ளன.கடந்த கோடை காலத்தில் வறண்டு கிடந்த ஏரி மற்றும் நீர்நிலைகள் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நிரம்பி வருகின்றன. இதில் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 77 ஏரிகள் 100 சதவீதமும், 161 ஏரிகள் 75 சதவீதமும், 85 ஏரிகள் 50 சதவீதமும், 122 ஏரிகள் 25 சதவீதமும், 134 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நிரம்பியுள்ளன. 2 ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 3,296 ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில், 516 நீர்நிலைகள் 100 சதவீதமும், 706 நீர்நிலைகள் 75 சதவீதமும், 533 நீர்நிலைகள் 50 சதவீதமும், 839 நீர்நிலைகள் 25 சதவீதமும், 702 நீர்நிலைகள் ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும் நிரம்பி உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.