| ADDED : நவ 14, 2025 02:19 AM
திருத்தணி: வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகையில் கட்டியிருந்த இரு கன்று குட்டிகளை, தெருநாய்கள் கடித்து குதறியதால், ஒரு கன்று பலியானது. மற்றொன்று படுகாயம் அடைந்தது. திருத்தணியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு அதிகரித்து வருகிறது. மேலும், தெருவில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் கால்நடைகளை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. திருத்தணி அடுத்த செருக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 58; விவசாயி. இவர், தலா இரண்டு பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாடு மற்றும் கன்றுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவிட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, கன்று குட்டிகளின் சத்தத்தை கேட்டு வந்த லோகநாதன், ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள், இரு கன்றுகளையும் கடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதில், ஒரு கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது. மற்றொரு கன்று குட்டியின் தலை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பின், கே.ஜி.கண்டிகையில் இருந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து, கன்றுக்கு சிகிச்சை அளித்தார். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.