டாஸ்மாக் சுவரில் ஓட்டை போட்டு மதுபாட்டில்கள், பணம் திருட்டு
திருத்தணி:திருத்தணி கார்த்திகேயபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று, குடியரசு தின விழா என்பதால், டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதனால், டாஸ்மாக் கடை திறக்காமல் பூட்டியே இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, கார்த்திகேயபுரம் டாஸ்மாக் கடையை மூடிக் கொண்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வீட்டிற்கு சென்றனர்.இந்நிலையில், டாஸ்மாக் கடை வழியாக சென்ற மக்கள் கடையின் சுவரில் ஓட்டை போட்டிருந்ததை கண்டனர். திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையின் மேற்பார்வையாளர்களை வரவழைத்து கடையை திறந்து பார்த்தனர். கடையில் 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் சில்லரை பணம் திருடு போனதாக அவர்கள் கூறினர்.இச்சம்பவம் குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடியும் வருகின்றனர். அப்பகுதியில், 24 மணி நேரம் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இருப்பினும் டாஸ்மாக் கடையின் சுவரில் ஓட்டை போட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டு உள்ளது.கடந்த வாரம், இதே போல, மத்துார் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் சுவரில் ஓட்டை போட்டு மதுபாட்டில்கள், 5,000 ரூபாய் பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.