உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வளர்ப்பு நாய்களை பதிவு செய்ய ஆர்வம்: சிகிச்சை மையங்களில் திரண்ட ஆர்வலர்கள்

 வளர்ப்பு நாய்களை பதிவு செய்ய ஆர்வம்: சிகிச்சை மையங்களில் திரண்ட ஆர்வலர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், தி.நகர் உட்பட ஏழு செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்களில், வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவது, நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் ஆகியவை, அக்., 8ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படுகிறது. பணிக்கு செல்வோர் வசதிக்காக, மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. கடந்த 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில், 727 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டது. பலரும் வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான ஆட்களே வந்தனர். இதனால், நவ., 23ம் தேதிக்குள் பதிவு செய்யாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி கறாராக தெரிவித்தது. இதனால், நேற்று காலை முதல், வளர்ப்பு நாய்களுடன் அந்தந்த மையங்களில் ஏராளமானோர் திரண்டனர். வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பதிவு, தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் தங்கள் வளர்ப்பு நாய்களை அழைத்து வந்தனர். அவர்களின் வாகனங்கள் சாலையிலே நிறுத்தப்பட்டதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மட்டும் 2,552 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது. தி.நகர் சிகிச்சை மையத்திற்கு வந்த வேளச்சேரியை சேர்ந்த ஆர்.சீனிவாசன், 48, கூறியதாவது: தி.நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் போதிய இடவசதியில்லை. பலர், நாய்களுக்கு முககவசம் அணியாமல் அழைத்து வந்தனர். இதனால் நாய்கள், மாறி மாறி சண்டையிட்டு, கடிக்கும் நிலை ஏற்பட்டது. இது போன்ற முகாமை ஒவ்வொரு மாநகராட்சி மண்டலத்திலும் நடத்த வேண்டும். அதனால் அலைச்சல் தவிர்க்கப்படுவதுடன், நாய் சண்டைகளும் தடுக்கப்படும். மேலும், நாய்களுக்கு 'சிப்' பொருத்துவது எங்களுக்கும் பயனாக உள்ளது. நாய் தொலைந்தால் கண்டுபிடிக்க முடியும். வளர்ப்பு நாய்களை சாலையில் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு சிறப்பு முகாம்களில், 3,279 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம், 10,820 செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, வெறிநாய்க்கடி பாதிப்பு கணிசமாக குறையும். வரும் 23ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் கடைசி சிறப்பு முகாமில், விடுபட்ட அனைவரும், வளர்ப்பு நாய்களுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ