| ADDED : நவ 27, 2025 03:25 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சியில் புதிய நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி மேகநாதன், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளியான ஒருவருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு, 'தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் செய்யலாம்' என, அரசு அறிவித்திருந்தது. அதன்படி, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நியமன உறுப்பினரை தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள், நேற்று பதவியேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில், திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளியான மேகநாதன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரின் பதவியேற்பு நிகழ்ச்சி, திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், நகராட்சி ஆணையர் பொறுப்பு சரவணகுமார், நியமன உறுப்பினர் மேகநாதனுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார். நியமன உறுப்பினருக்கு, நகராட்சி கவுன்சிலர்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. ஆனால், தீர்மானத்தில் கையெழுத்து போடுவது மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஓட்டு போட அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.