உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு சரணாலயத்தில் இரை தேடும் பறவைகள்

பழவேற்காடு சரணாலயத்தில் இரை தேடும் பறவைகள்

கும்மிடிப்பூண்டி, ஆந்திராவில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், கண்ணுக்கு எட்டிய துாரத்தில் பறவைகள் இரை தேடி வருவதால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழவேற்காடு ஏரி, தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியை இணைத்தபடி, 481 சதுர கி.மீ., பரப்பு கொண்ட பரந்து விரிந்துள்ளது. இந்த ஏரியின் சதுப்பு நில பகுதிகள், பறவைகள் இரை தேட ஏதுவாக இருப்பதால், 100 வகையான பறவைகள், பழவேற்காடு ஏரியை வசிப்பிடமாக கொண்டுள்ளன. ஒட்டுமொத்த பழவேற்காடு ஏரியும், பறவைகள் சரணாலயமாக திகழ்வதால், அந்தந்த பகுதிக்கு என, தனி பெயர் கொண்டு அழைக்காமல், 'பழவேற்காடு சரணாலயம்' என, அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்லும் சாலையின் இருபுறமும், பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. சில மாதங்களாக சாலையை ஒட்டியிருந்த ஏரி பகுதி வறண்டு காணப்பட்டது. சில நாட்களாக பெய்த மழையில், இப்பகுதி சதுப்பு நிலமாக மாறியது. இதனால், தொலைதுாரத்தில் இருந்து இரை தேடி பறவைகள் வருகின்றன. இதனால், பறவைகளை காண சுற்றுலா பயணியர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கொக்குகள், வர்ணநாரைகள், நீர் காகங்கள் உள்ளிட்ட பறவைகள், சாலையை ஒட்டியுள்ள சதுப்பு நில பகுதிகளில், அதிகளவில் காணப்படுகின்றன. அடுத்தத்த நாட்களில் பறவைகளின் வருகை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை