உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்விளக்குகள் இல்லாத பாலம் இரவில் மீனவ கிராமத்தினர் தவிப்பு

மின்விளக்குகள் இல்லாத பாலம் இரவில் மீனவ கிராமத்தினர் தவிப்பு

பழவேற்காடு, பழவேற்காடு - பசியாவரம் இடையே, ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாததால், மீனவ கிராமத்தினர் இரவு நேரங்களில் சிரமத்துடன் பயணிக்கின்றனர். பழவேற்காடு ஏரியின் தீவுப்பகுதியில் பசியாவரம், சாட்டன்குப்பம், இடமணி உள்ளிட்ட ஐந்து மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, பழவேற்காடு - பசியாவரம் இடையே, ஏரியின் குறுக்கே, 18.20 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக, மேற்கண்ட கிராம மக்கள் பயணித்து வரும் நிலையில், இங்கு மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் பாலம் இருண்டு கிடப்பதால், மீனவ கிராமத்தினர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பல்வேறு தேவைகளுக்கு பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்று வரும் மீனவ பெண்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இருட்டில் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு பயணிக்கும் நிலையும் உள்ளது. அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: மாநில நெடுஞ்சாலைத் துறையின் மேற்பார்வையில் பாலத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளிடம் மின்விளக்கு அமைத்து தரும்படி கேட்டபோது, 'அதற்கான நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை' என கைவிரிக்கின்றனர். மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், புதிய பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ