உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவது... கானல் நீர்!:மழை நேரத்தில் 15 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்; படகு பயணத்திற்கு விமோசனம் எப்போது?

ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவது... கானல் நீர்!:மழை நேரத்தில் 15 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்; படகு பயணத்திற்கு விமோசனம் எப்போது?

பொன்னேரி:ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாததால், மழைக்காலங்களில் பொன்னேரி அருகே, காட்டூர் - பழவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பதுடன், பல கிராம மக்கள் ஆபத்தான படகு பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், 10 - 15 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியதும் நேரிடுகிறது. எனவே, விரைவாக மேம்பாலம் கட்ட வேண்டும் என, ஆண்டார்மடம் உள்ளிட்ட பல கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமம் வழியாக ஆரணி ஆறு செல்கிறது. இதே பகுதியில், காட்டூர் - பழவேற்காடு சாலையும் அமைந்துள்ளது. இச்சாலை வழியாக, ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு, கடப்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு, பழவேற்காடு மற்றும் பொன்னேரிக்கு சென்று வருகின்றனர். மேலும், சென்னை மற்றும் மீஞ்சூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பழவேற்காடு பகுதிக்கு சென்று வரவும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். காட்டூர் - பழவேற்காடு சாலையில், ஆரணி ஆற்றின் குறுக்கே சிறிய சிமென்ட் உருளைகள் பதிக்கப்பட்ட தரைப்பாலம் இருந்தது. 2023ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, சிமென்ட் உருளைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், போக்குரத்து பாதித்தது. அத்துடன், ஆண்டார்மடம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பழவேற்காடு மற்றும் பொன்னேரி செல்ல, தத்தமஞ்சி, வஞ்சிவாக்கம், திருப்பாலைவனம் வழியாக வாகனங்களில், 10 - 15 கி.மீ., சுற்றிச் சென்றனர். அதேநேரத்தில், வாகனங்கள் இல்லாதவர்கள், ஆரணி ஆற்றை கடந்து செல்ல படகு போக்குவரத்து செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் படகில் ஆற்றை கடந்து, 3 கி.மீ.,யில் உள்ள பொன்னேரி - பழவேற்காடு சாலைக்கு நடந்து சென்று, அங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்று வந்தனர். கடந்தாண்டும் இதே நிலை தான் தொடர்ந்தது. தற்போது, காட்டூர் - பழவேற்காடு சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளதுடன், ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலமும் இல்லாததால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. Galleryஇதனால், மழைக்காலங்களில் போக்குவரத்து பாதித்து, கிராம மக்களின் இன்னல்கள் தொடர்கின்றன. அதுமட்டுமின்றி, ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல், கானல் நீராகவே உள்ளது. நடப்பாண்டும் கனமழை பெய்தால், ஆற்றை கடக்க படகில் பயணிப்பதும், 10 - 15 கி.மீ., சுற்றிக் கொண்டு செல்வதும் தொடரும் என்ற, கவலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து, மாவட்ட நபார்டு கிராம சாலைகள் திட்ட அதிகாரி கூறியதாவது: ஆண்டார்மடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரிவான அறிக்கை தயாரித்து, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில், மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். தற்காலிக பாதை பணியும் இல்லை பாலம் கட்டுவது எப்போது என்று தெரியவில்லை. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. வரும் நாட்களில் கனமழை பெய்தால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆற்றில் உள்ள தற்காலிக சாலையை மூழ்கடித்தும், அரித்துக் கொண்டும் ஆற்று நீர் செல்லும். ஆண்டுதோறும் கண்துடைப்பிற்காக மணல் மூட்டைகளை போட்டு, தற்காலிக பாதை அமைக்கும் பணி, இந்த ஆண்டு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டோம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. அவசர உதவிக்கு எங்கும் செல்ல முடியாமல் பரிதவிக்கிறோம். மேம்பாலம் கட்டினால் தான், மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். - எம்.பிரசாந்த், கிராமவாசி, ஆண்டார்மடம், பொன்னேரி. மூழ்கும் சாலை கடந்த, 2022ல், ஆண்டார்மடம் தரைப்பாலத்தின் மேற்கு பகுதியில், 100 மீட்டரில் ஆரணி ஆற்றின் குறுக்கே, 11 ஷட்டர்களுடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, உபரிநீர் திறக்கும் போது, காட்டூர் - பழவேற்காடு சாலையை மூழ்கடித்து செல்கிறது. இதனாலும், மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை