உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.17 கோடி மழைநீர் வடிகால் திட்டத்தில் குளறுபடிஆவேசம்!:செங்குன்றத்தில் பணியை தடுத்து நிறுத்திய வியாபாரிகள் செங்குன்றம், மே 3--

ரூ.17 கோடி மழைநீர் வடிகால் திட்டத்தில் குளறுபடிஆவேசம்!:செங்குன்றத்தில் பணியை தடுத்து நிறுத்திய வியாபாரிகள் செங்குன்றம், மே 3--

செங்குன்றத்தில் பழைய மழைநீர் வடிகாலை அகற்றி புதிதாக அமைத்து, நடைபாதை வசதி ஏற்படுத்துவதற்காக 17 கோடி ரூபாய் நிதியை, நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக செயல்படுத்தவில்லை. குளறுபடியாக நடப்பதால், அப்பகுதி நெல்மண்டி உரிமையாளர்கள், திட்டபணியை நிறுத்தியுள்ளனர்.சென்னை, செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையானது. இதனால், நெல்மண்டி வியாபாரிகள், கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதை தவிர்க்க, சாலையின் இரு பக்கமும், புதிதாக மழைநீர் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.மொத்தம் 1.2 கி.மீ., துாரத்திற்கு, 7 அடி ஆழம் மற்றும் 7 அடி அகலத்தில் கால்வாய், அதன் மீது நடைபாதை அமைக்க முடிவானது. புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது.ஜி.என்.டி., சாலை, போக்குவரத்து நிறைந்தது என்பதால், மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டது. மூன்று பகுதியாக பிரித்து, மூன்று ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணிகள் நடந்து வருகின்றன.ஆரம்பம் முதல், நெடுஞ்சாலைத் துறை எல்லைக்கான உரிய அளவீடு இல்லாமல், குளறுபடியாக பணிகள் நடந்தன.உதாரணத்திற்கு 5 அடி இடம் நெடுஞ்சாலை துறை வசம் வருகிறது என்றால், கடைகாரர்களின் தேவைக்கு ஏற்றபடி சுருக்கியும் நீட்டியும் மழைநீர் கால்வாயை அமைத்துள்ளனர்.இந்நிலையில், செங்குன்றம் நெல் மார்க்கெட் முதல், திரு.வி.க., தெரு சந்திப்பு வரை, மழைக்காலத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கும் என்பதால், அப்பகுதியில் பழைய கால்வாயை அகற்றியிருக்க வேண்டும்.ஆனால், மேற்கண்ட பகுதியில் துார்ந்து போன பழைய வடிகாலை அகற்றி, புதிய வடிகால் அமைக்காமல், 450 அடி நீளத்திற்கு நடைபாதை அமைக்கும் பணியை மட்டும், ஒப்பந்ததாரர்கள் நேற்று முன்தினம் செய்ய முயன்றனர். அதற்காக, நடைபாதையில் பதிக்கும் 'பேவர் பிளாக்' மற்றும் ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை இறக்கி வைத்தனர்.இதையறிந்த நெல் மண்டி உரிமையாளர்கள், துார்ந்து போன பழைய வடிகாலை அகற்றி, புதிய மழைநீர் வடிகால் அமைத்த பிறகே நடைபாதை அமைக்க வேண்டும் எனக்கூறி, அந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால், பணி நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர், அவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.நெல் மண்டி உரிமையாளர்கள் கூறியதாவது:இப்பணி, ஆரம்பம் முதலே முறையாக நடக்கவில்லை. கால்வாய் அமைப்பதாக கூறி தர்கா தெரு, சர்ச் தெரு உள்ளிட்ட சில தெருக்கள் வினியோிக்கத்திற்காக நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட, பொது குடிநீர் குழாய் இணைப்புகளை உடைத்தனர்.அவை, ஆறு மாதங்களாக சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் நிலை தற்போதும் நிலவுகிறது.தவிர, புதிதாக கட்டப்படும் மழைநீர் வடிகால் இணைப்பை, புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் நேரடியாக இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், திரு.வி.க., தெரு சந்திப்பில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இணைத்துள்ளனர்.இதனால், அங்கு தேங்கும் கழிவுநீர், அருகில் உள்ள ஆழ்துளை குழாய் கிணறுகளில் கலந்து, அவையும் பாழடைந்தன. நெல் மார்க்கெட் அருகில் உள்ள, செங்குன்றம் நகர தி.மு.க., அலுவலகம், அதனுடன் கூடிய கடைகள் மற்றும் சில கட்டட உரிமையாளர்களுக்கு சாதகமாக, நெடுஞ்சாலைத் துறையினர் செயல்படுகின்றனர். அதனால், அவசர அவசரமாக நடைபாதையை அமைக்க முயற்சிக்கின்றனர்.மேற்கண்ட பிரச்னை குறித்து, திருவள்ளூர் கலெக்டர் விசாரித்து, மழைநீர் வடிகால் பணியை விரைவாக முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரச்னை

புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஓராண்டுக்கும் மேல், 'ஜவ்வாக' இழுப்பதால், செங்குன்றம் நெல் மார்க்கெட் முதல், திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு வரையிலான ஜி.என்.டி., சாலையின் இரு பக்கமும், தலா 30 அடி அகலத்திற்கு, பல்வேறு வகை ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால், தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சிலர் விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மேலும், மாநகர பேருந்து பயணியருக்கான நிழற்குடையும் அமைக்க முடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAAJ68
மே 03, 2024 12:50

சென்னையில் பல சில இடங்களில் நடைபாதையை அகற்றி விட்டனர் சாலையும் நடைபாதையும் ஒரே மட்டத்தில் உள்ளன. நடப்பதற்கு இடமில்லை நடைபாதை இருந்த இடத்தில் வடிகால் மூடிகள் பொருத்தியுள்ளனர். சாலையும் நடைபாதையும் ஒரே மட்டத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் வடிகால் மூடிகளின் மீது வாகனத்தை செலுத்தும் நிலைமை உள்ளது அதனால் சேதம் ஏற்படும் ஒன்றும் புரியவில்லை கோமாளித்தனமாக வேலை செய்கின்றனர்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ