குத்தம்பாக்கம் பஸ் நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்குது சி.எம்.டி.ஏ.,
சென்னை:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் இயக்கம், பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலத்தில், 427 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஜூன் அல்லது ஜூலையில் பேருந்து நிலையத்தை திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்கேற்ப, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை, குத்தம்பாக்கத்துக்கு மாற்றுவதற்கான பணிகளை, போக்குவரத்து கழகங்கள் துவக்கி உள்ளன.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் குத்தம்பாக்கத்துக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கிளாம்பாக்கம் போன்று குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை, 15 ஆண்டுகளுக்கு இயக்குதல் மற்றும் பராமரித்தல் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி, பேருந்து நிலையத்தை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. அரசு, தனியார் பங்களிப்பு அடிப்படையில் செயல்படுவதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான 'டெண்டர்' பணிகள் துவங்கியுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.