திருவள்ளூர்:ஆந்திர மாநிலத்தில், வரும் 13ம் தேதி சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில், 5 கி.மீ., துாரத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மற்றும் மதுக்கூடங்கள் மூன்று நாள் மூட திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி வட்டத்தில் மத்துர், பொன்பாடி, பனப்பாக்கம் மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்தில் கோரக்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, புதுப்பட்டு.ஊத்துக்கோட்டை வட்டத்தில் கச்சூர், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பொம்மாஜிகுளம், சின்ன கொக்குபாளையம், துாராப்பள்ளம், எகுமதுரை, ஆரம்பாக்கம், எளாவூர், பல்லாவாடா, மாதர்பாக்கம், துாராப்பள்ளம், செதில்பாக்கம் ஆகிய பகுதிகளில், 17 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இந்த கடைகளை, வரும் 11ம் தேதி இரவு 7:00 மணி முதல் 13ம் தேதி இரவு 7:00 மணி வரை மூட வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.