கும்மிடிப்பூண்டி: 'கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில், கழிவுகள் கொட்டும் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதாரமான தாமரை ஏரி, தொழிற்சாலை மற்றும் வெளியிடங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. இதனால், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு, வீட்டு உபயோக பொருட்கள் கருமையாக மாறுவது, குடியிருப்பு மக்களின் சுகாதாரம் பாதிப்பு என, பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது. இதுகுறித்து, கடந்த 13ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. கடந்த 17ம் தேதி நடந்த, பேரூராட்சி கூட்டத்திலும் விவாதம் நடந்தது. மாவட்ட நிர்வாகத்திற்கும் பல்வேறு புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து, நேற்று கலெக்டர் பிரதாப், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மற்றும் வருவாய், பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். அதன்பின், கலெக்டர் பிரதாப் கூறியதா வது: தொழிற்சாலை மற்றும் பல்வேறு கழிவுகளால் தாமரை ஏரி பாழாகி வருவது குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும், பொதுமக்களிடம் வந்த புகார்களின் அடிப்படையிலும், ஏரியை ஆய்வு செய்துள்ளோம். இங்குள்ள பிரச்னைகள் குறித்து அறியப்பட்டு உள்ளது. வெளியிடங்களில் இருந்து டேங்கர் லாரி களில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவு று த்தப்பட்டு உள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்கள், ரசாயனம் உள்ளிட்ட கழிவுகளை ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கொட்டினால், கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, டேங்கர் லாரி உரிமையாளர்கள் நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் கழிவுகளை கொட்ட வரும் லாரிகளை கண்காணிக்க 'சிசிடிவி' பொருத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் ரசாயன கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சா லை நிர்வாகங்களிடம், ஏரியின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்படும். தொழிற்சாலை கழிவுகள் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என்பது குறித்து, அதன் நிர்வாகங்களிடம் அறிக்கை கேட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய, இடைப்பட்ட, நிரந் தரம் என, மூன்று கட்டங்களாக ஏரியை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.