மீன்பிடி தொழிலில் பிரச்னை ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு
பழவேற்காடு:பழவேற்காடு மீனவ கிராமத்தில் கூனங்குப்பம், திருமலைநகர், செம்பாசிபள்ளி, நடுகுப்பம், லைட்அவுஸ்குப்பம், அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், சாட்டன்குப்பம், பசியாவரம் மற்றும் கோரைகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தோர், கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.இவர்கள், பெரிய அளவு கொண்ட சுருக்கு மடி வலை மற்றும் சிறிய அளவு கொண்ட மாப்பு வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்கின்றனர். மாப்பு வலையை பயன்படுத்துவதால், மீன்கள் கூட்டம் கலைந்துவிடுவதாகவும், அதை அனைத்து மீனவ கிராமங்களும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மீனவ கிராமங்களுக்குள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இதை கோரைகுப்பம், சாட்டன்குப்பம் மீனவ கிராமத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து, கோரைகுப்பம் மீனவர்கள் மாப்பு வலையை பயன்படுத்தி வந்தனர். நேற்று முன்தினம் கோரைகுப்பம் மீனவர்கள் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, மற்ற மீனவ கிராமத்தினர் அங்கு வந்து, மாப்பு வலைகளை சேதப்படுத்தினர். இதுகுறித்து கோரைகுப்பம் மீனவர்கள் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, நேற்று பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர். இது தொடர்பாக, ஆர்.டி.ஓ., கனிமொழியிடம் முறையிட்டனர். அப்போது, மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் மற்றும் வருவாய், காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.இதுகுறித்து கோரைகுப்பம் மீனவர்கள் கூறியதாவது:அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மற்ற கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர். நாங்கள் பயன்படுத்தும் வலைக்கு எந்தவொரு தடையும் கிடையாது. இருப்பினும், அதை பயன்படுத்தக்கூடாது என, மற்ற மீனவ கிராமத்தினர் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர்.தொடர்ந்து எங்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அவர்களும் தொழில் செய்ய வேண்டும். நாங்களும் தொழில் செய்ய வேண்டும். அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'விரைவில் இருதரப்பினர் இடையே பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.