வழிகாட்டி பலகையில் தவறான தகவலால் குழப்பம் சரியான ஊரை கண்டுபிடியுங்கள் தேசிய நெடுஞ்சாலையில் திணறும் வாகன ஓட்டிகள்
கடம்பத்துார் : சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருநின்றவூர் முதல் திருவள்ளூர் வரை 18 கி.மீ.,க்கு ஆறுவழியாக மாற்றும் பணி நடந்து வருகிறது. பணி முடிந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளில், தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருநின்றவூர் - ரேணிகுண்டா வரை, 124 கி.மீட்டருக்கு ஆறுவழிச்சாலையாக மாற்றும் பணி, 2011ல் துவக்கப்பட்டது. இதில், திருநின்றவூரில் இருந்து செவ்வாப்பேட்டை, தண்ணீர்குளம், காக்களூர் வழியாக திருவள்ளூர் வரை, 18 கி.மீ.,க்கு, 364.21 கோடி ரூபாயில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, இந்த சாலையில் வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அமைக்கப்பட்ட சில இடங்களில், வழிகாட்டி பலகையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. திருநின்றவூர் பகுதியில், திருவள்ளூர், வேப்பம்பட்டு, திருப்பதி என, வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். ஆனால், 'திருநின்றவூருக்கு பதிலாக அம்பத்துார்' என வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், காக்களூர் பகுதியில், ஊத்துக்கோட்டை 22 கி.மீ., என்பதற்கு பதிலாக, ஊத்துக்கோட்டை 3 கி.மீ., எனவும், திருநின்றவூர் பகுதியில் சென்னைக்கு 37 கி.மீ., என்பதற்கு பதிலாக 13 கி.மீ., எனவும் தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல், பல்வேறு இடங்களில் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சென்னை - திருப்பதி வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளை ஆய்வு செய்து, தவறான தவறுகளை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், 'சென்னை - திருப்பதி வெளிவட்ட சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது, வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்ததும், வெளிவட்ட சாலையில் ஆய்வு செய்து, தவறான வழிகாட்டி பலகைகள் திருத்தி அமைக்கப்படும்' என்றார். திருநின்றவூரில் இருந்து திருப்பதி செல்வதற்காக, சென்னை - திருப்பதி வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, அம்பத்துார் என, வழிகாட்டி பலகையில் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அங்கு, திருநின்றவூர் என இருக்க வேண்டும். அவ்வப்போது சென்று வரும் எனக்கே குழப்பம் ஏற்பட்டது. புதிதாக வருவோர் இன்னும் குழம்பிவிடுவர். - ஆர்.வேல்முருகன், பாக்கம், திருநின்றவூர்.