சென்னை:சென்னை, புறநகர் பகுதிகளான திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு, தேவைக்கு ஏற்ப ரயில் சேவை இல்லாததால், பயணியர் பரிதவிக்கின்றனர். அதேபோல, பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் புறநகர் ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பணியில் போதிய போலீசார் இல்லாததால் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களும் சர்வசாதாரணமாக அரங்கேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில், தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் செல்லும் ரயில்கள் குறைந்தது அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக ரயில்கள் தொடர்ந்து தாமதமாக இயக்கப்படுவதால், பயணியர் கடும் அவதியடைகின்றனர். கோயம்பேடு சென்று அங்கிருந்து பேருந்துகள் மூலம் செல்வதற்கு கூடுதல் நேரம் ஆகிறது. கோயம்பேடில் இருந்தும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், இப்பகுதி பயணியர் ரயில்களை நம்பியே பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். புகார்
ஏற்கனவே, இது போல ரயில்கள் தாமதமான போதும், தற்போதும் இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் அளிக்கப்பட்டன. அப்போது, புறநகர் ரயில்கள் தாமதத்தை தவிர்க்கும் வகையில் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மாற்றி இயக்கப்பட்டன. அது மட்டுமின்றி, பல்வேறு புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோட்டத்தை பொறுத்தவரை, 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை புறநகர் ரயில் நிலையங்கள். தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், நாளுக்கு நாள் ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப போதிய ரயில்கள் சேவைகள் இல்லை.பீக் ஹவர்களில் 10 - 15 நிமிட இடைவெளியில் ரயில் சேவை உள்ளது. பிற வேளைகளில், 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், ரயில்களின் வருகை குறித்து தெளிவான கால அட்டவணையும் நிலையங்களில் இல்லை.ரயில்வே நிர்வாகம் ரயில் இயக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தாமல், அழகுபடுத்தும் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதில், எந்த பயனும் இல்லை. போதிய அளவில் ரயில்களை இயக்க கூடுதல் பாதைகள், நடைமேடைகளை அமைப்பதில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். கண்காணிப்பு
பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் புறநகர் ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பணியில் போதிய போலீசார் இல்லை. இதனால் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.மீண்டும் இயக்காதது ஏன்?
திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்க செயலர் முருகையன் கூறியதாவது:புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையில், பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி, சென்னை புறநகரில் 30க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. இதுவரை மீண்டும் இயக்கப்படவில்லை.அதேபோல, கொரோனா பாதிப்பின் போது நிறுத்தப்பட்ட இரண்டு நள்ளிரவு மின்சார ரயில்களின் சேவையும் இன்னும் துவக்கப்படவில்லை.பயணியர் அதிகரித்து வரும் நிலையில், மின்சார ரயில்களின் சேவை குறைப்பது ஏற்க முடியாது. மேலும், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில், சில நேரங்களில் ஒன்பது பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், நெரிசலில் சிக்கி பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். 12 பெட்டிகள்
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:ரயில்பாதை பராமரிப்பு பணி முடிந்த பின், நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படும். பயணியரின் தேவையை கருத்தில் வைத்து, சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரிக்கு கூடுதல் மின்சார ரயில்களின் சேவையை துவங்கினோம்.விரைவில் 12 பெட்டிகள் உடைய புதிய மின்சார ரயில்கள் வரும்போது, சென்னை மற்றும் புறநகரில் ஒன்பது பெட்டிகள் உடைய பயணியர் ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
17 ரயில் நிலையங்களுக்குஒரே ஒரு காவல் நிலையம்
மாநில ரயில்வே காவல் நிலையம், கொருக்குப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் செயல்படுகிறது. இந்த காவல் நிலையத்தின் எல்லை, கொருக்குப்பேட்டையில் துவங்கி, திருவொற்றியூர், எண்ணுார், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் வரை, 62 கி.மீ., துாரத்திற்கு உள்ளது.இந்த காவல் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 46 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 23 பேர் மட்டுமே உள்ளனர். அதில், காவல் நிலைய எழுத்தர், நீதிமன்ற பணி, விடுப்பில் உள்ளவர் போக, 10க்கும் குறைவானவர்களே தினமும் பணியில் இருக்கின்றனர். மொத்தம் உள்ள, 17 ரயில் நிலையங்களுக்கு இருப்பதோ ஒரே ஒரு காவல் நிலையம். பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் புறநகர் ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பணியில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களும் சர்வசாதாரணமாக அரங்கேறுகின்றன.பாதிக்கப்படுவோர், காவல் அவசர உதவி எண் 99625 00500 தொடர்பு கொண்டு தெரிவித்தால், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வருவதற்கே, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாகிறது. எனவே, கூடுதல் காவல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.