சீராக குடிநீர் வினியோகம் கவுன்சிலர்கள் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:ஆரணி பேரூராட்சியில், செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் இருந்ததால், மூன்று மாதங்களுக்கு பின் நேற்று, கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்த கூட்டத்தில், செயல் அலுவலர் அபுபக்கர், துணை தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தனர்.பிறப்பு, இறப்பு, வரி வசூல், நிலுவை, திட்ட அனுமதி உட்பட, 69 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.குறித்த நேரத்தில், சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, கவுன்சிலர்கள் அனைவரும் தெரிவித்தனர். தொடர்ந்து, கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன் வைத்தனர்.ரஹ்மான்கான் - தி.மு.க.,: ஆரணி பேரூராட்சியில் திறந்தவெளியில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களுக்கு மூடி அமைக்க வேண்டும். பழைய இருளர் காலனி பகுதியை கலைஞர் நகராக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சிறுபான்மையினர் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.குமார் - பா.ஜ.,: ஆரணி பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள்குப்பம், நடுகுப்பம் பகுதிகளில் சீரான குடிநீர் வழங்க வேண்டும்.ஆரணியில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய சக்தி மின் விளக்குகளை பயன்படுத்தி, அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, செயல் அலுவலர் தெரிவித்தார்.