குப்பை போடாதீர்கள் பேனர் வைத்தும் பலனில்லை?
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியற்றில் இருந்து தினமும், 3,000 கிலோ குப்பை சேர்கிறது. பேரூராட்சி சார்பில் குப்பையை அள்ள, துாய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் டிரஸ்ட் வாயிலாக, 26 துாய்மைப் பணியாளர்கள் வண்டிகளில் ஒவ்வொரு வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் மட்கும், மட்காத குப்பையை சேகரிக்கின்றனர்.நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள, பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக குப்பையை சாலையில் கொட்ட வேண்டாம், துாய்மைப் பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் கொடுக்க வேண்டும் என, பலமுறை கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், பொதுமக்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால், மீண்டும் சாலையில் கொட்டுகின்றனர்.சத்தியவேடு சாலையில் பாலத்தின் அருகே, குப்பையை கொட்டக் கூடாது என, எச்சரிக்கை பேனர் வைத்தும் அங்கேயே மக்கள் குப்பையை கொட்டுகின்றனர்.நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.