இரு லாரிகள் மோதல் ஓட்டுநர் உயிரிழப்பு
சோழவரம்:அருமந்தையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 29; லாரி ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பாரத் பெட்ரோல் முனையத்தில் இருந்து, பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரியுடன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள அருமந்தை அருகே செல்லும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் நின்ற கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில், டேங்கர் லாரி சேதமடைந்து, ஓட்டுநர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மகேந்திரனின் உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சேதமான டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து, சாலையில் வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, சாலையில் வழிந்தோடிய பெட்ரோல் மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது தண்ணீரை பாய்ச்சினர். செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.