வறண்ட வல்லுார் அணைக்கட்டு பருவமழைக்காக காத்திருப்பு
மீஞ்சூர்,:மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இங்கு தேக்கி வைக்கப்படும் மழைநீர் வல்லுார், மேலுார், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.கடந்தாண்டு மழையின்போது, அணைக்கட்டு நிரம்பிய நிலையில், நடப்பாண்டு கோடையின் போது படிப்படியாக நீர் இருப்பு குறைந்தது. மூன்று மாதங்களாக அணைக்கட்டு பகுதி வறண்டு, வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதேசமயம், கடந்தாண்டு இதே நாளில் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து நீர்வளத் துறையினர் கூறியதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆந்திராவில் கனமழை பெய்ததால், பூண்டி ஏரி நிரம்பி, உபரிநீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டது.இதனால், வழக்கத்தைவிட முன்கூட்டியே அணைக்கட்டிற்கு நீர்வரத்து அதிகரித்து, இதே நாளில் நிரம்பி வழிந்தது. தற்போது பூண்டி, சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.பருவமழை தீவிரமடைந்து, மேற்கண்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறும்போது, கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து இருக்கும். அப்போது தான் அணைக்கட்டு நிரம்பும்.நவம்பர் மாத இறுதியில் அணைக்கட்டிற்கு நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.