உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரவுபதி அம்மன் கோவில்களில் துரியோதனன் படுகளம் விமரிசை

திரவுபதி அம்மன் கோவில்களில் துரியோதனன் படுகளம் விமரிசை

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது.தொடர்ந்து, தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது. கடந்த 30ம் தேதி திரவுபதியம்மன் திருமணம், 2ம் தேதி சுபத்திரை திருமணம், 5ம் தேதி அர்ஜுனன் தபசு நடந்தது.நேற்று காலை 8:45 மணியளவில் கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு, 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.அதேபோல், திருத்தணி பட்டாபிராமபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில், நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தது. இன்று நண்பகல் 11:00 மணிக்கு இரு கோவில்களிலும் தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.

ஆர்.கே.பேட்டை

ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்டார். இந்த நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். அதேபோல், விடியங்காடு அடுத்த பொன்னை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீகாளிகாபுரம் மற்றும் பொன்னை திரவுபதியம்மன் கோவில்களில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !